25,000+ கலை பிரியர்கள் உலகம் முழுவதும்
இசை மற்றும் நாட்டிய உலகம்
கலை உலகில் அருங்காட்சிகள் & நிகழ்வுகள்
“ஸாஸ்திரக் கலைகள் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சிக்கு என்னைத் தலைமையேற்க அழைத்தாலும் சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவிப்பது எனது வழக்கம்.. பழக்கம். இப்படிப்பட்ட நானே ஒரு விஷயத்தில் சற்று யோசிப்பதுண்டு. “துவக்க விழா” வந்து உங்க கையால தொடங்கி வையுங்கோ” என்றழைத்தால் கூடுமானவரை தவிர்க்கவே நினைப்பேன்.
இசை மற்றும் நாட்டிய நிகழ்வுகளில் சிறந்த வழிகாட்டுதலை வழங்குகிறோம்.
உங்கள் இசை மற்றும் நாட்டிய திறமையை மேம்படுத்த தனிப்பட்ட பயிற்சிகள் வழங்குகிறோம்.
காரணம்... பெரிய மனுஷன்னு கூப்பிடுகிறார்களே என நாமும் போய் தொடங்கி வைப்போம். அதனை அதன்பின் பொறுப்புடன் நடத்த வேண்டியவர்கள் அவ்விதம் நடந்து கொள்ளாவிடில் அதற்கு மூடுவிழா நடந்தேறிவிடும்.
இதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் பொறுப்பின்மையை காரணமாகக் கூறாமல் “அந்த விடியாமூஞ்சி வந்து தொறந்து வைச்சான்... ஒன்னுத்துக்கும் வெளங்காம போயிடுச்சு.. என தலைமையேற்று தொடங்கி வைத்த பாவத்திற்காக காலமெல்லாம் என்னைக் குறிப்பிட்டு வசைபாடுவார்கள்... இது தேவையா?
ஆனால், ‘ஸரிகமபதநி’-யோடு தொடர்பு கொண்டு இருப்பவர்கள் அனைவருமே சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள வெற்றிகரமான மனிதர்கள். இதையும் வெற்றி பெறச் செய்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.”
இது இசை மேதை, சங்கீதப் பிதாமகர் ஸ்ரீமான் செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் அவர்கள் 1996-ம் வருடம், நவம்பர் 6ம் தேதி மாலை, சென்னை, மயிலாப்பூர், ஸ்ரீநிவாஸ அரங்கத்தில் ‘ஸரிகமபதநி’-யின் முதல் இதழினை வெளியிட்டுப் பேசிய தலைமையுரையின் ஒரு பகுதி.
செம்மங்குடி வெளியிட, இண்டியன் எக்ஸ்பிரஸ் அதிபர் மனோஜ்குமார் சொந்தாலியா முதல் பிரதியினை பெற்றுக் கொண்ட இவ்விழாவில் ஸரிகமபதநியின் முதல் ஆசிரியரும், இன்றைய பிரபல ஜோதிடருமான ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக ரைட்ஸ் விஸ்வநாதன் (இன்றைய முதன்மை ஆசிரியர்), டாக்டர். நல்லி குப்புசாமி செட்டியார் (தலைமைப் புரவலர்), நினைவில் வாழும் தூர்தர்ஷன் ஏ.நடராஜன், நாட்டிய ஆசான் வழுவூர் சாம்ராஜ் பிள்ளை ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிப் பெருமை சேர்த்தனர். முன்னதாக ஸ்ரீராம் கங்காதரனின் நாத மழை பொழிந்தது.
செம்மங்குடி அவர்களது அச்சம் ஸரிகமபதநியைப் பொறுத்தவரை தேவையற்றது என்பதனை அடுத்த சில ஆண்டுகளில் பிரபல இசை விமர்சகர் சுப்புடு அவர்கள் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் மூலம் நிரூபித்தார்.
“தெரிந்தோ, தெரியாமலோ கேள்வி ஞானத்தையும், அனுபவத்தையும் வைத்துக் கொண்டு கலை விமர்சனம் என்கிற பெயரில் இத்தனை காலம் ‘பம்மாத்து’ செய்து வந்திருக்கிறேன் என்பது ‘ஸரிகமபதநி’ படித்த பிறகுதான் எனக்கு ஞானதோயம் வந்திருக்கிறது.
‘ஸரிகமபதநி’ எனக்கொரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது மிகை அல்ல. உங்களுடைய விமர்சகர்கள் ரொம்ப தெளிவாகவும், விமரிசையுடனும் எழுதுகிறார்கள். அதுவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் அருமையிலும் அருமை. இவை எனக்கு ஒரு புதிய உலகத்தையே அறிமுகம் செய்து இருக்கிறது.”
சுப்புடு தன் கைப்பட எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது. வஷிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதைக் காட்டிலும் கடினமானது சுப்புடுவால் பாராட்டுப் பெறுவது என்பது.
சிற்சில தடுமாற்றங்கள், பொருளாதாரச் சிக்கல்களால் தாமதங்கள் இருப்பினும் கால் நூற்றாண்டினைக் கடந்தும் தனது 29-ம் அகவையில் அழகு நடைபோட்டு மிளிர்கிறது ஸரிகமபதநி. நமது பாராம்பரிய இசை - நாட்டியக் கலைக்கென தமிழில் வெளிவரும் ஸரிகமபதநி இன்று உலக நாடுகள் முழுமையும் தனது வாசகச் சிறகுகளை விரித்துள்ளது.
ஸரிகமபதநி-யின் முந்தைய இதழ்களை புரட்டுகையில் வியப்பு மேலிடுகிறது. காரணம், அன்றைக்கு தொடக்க நிலை கலைஞர்களாக, அறிமுக நாட்டிய மணிகளாக, பக்கவாத்யக் கலையில் இளைஞர்களாக நாம் அறிமுகப்படுத்தி - ஊக்குவித்த எண்ணற்றவர்கள் இன்றைக்கு முன்னணிக் கலைஞர்களாக பூமிப் பந்து முழுமையும் பறந்து கொண்டு இருப்பது நமக்கு பெருமை அளிப்பதாக உள்ளது.
ஸரிகமபதநிக்கு, இசை - நாட்டியத் தகவல்களை தொகுத்து அளித்தவர்கள், ஸங்கீத நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்தவர்கள் பலர் இன்றைக்கு இசைக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக, இசைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக, தலைமை ஆசிரியர்களாக கலைத் தொண்டு செய்து வருகிறார்கள். ஸரிகமபதநியின் பல்வேறு கூறுகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் கவனம் கொண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் தகுதியும் - திறமையும் உள்ள இளம் கலைஞர்களை ஸரிகமபதநியின் வாசகர்களைக் கொண்டு தேர்வு செய்து துறைவாரியாக பாட்டிற்கு (நாதஸ்ரீ), நாட்டியத்திற்கு (ந்ருத்யஸ்ரீ), விமர்சனக் கலைக்கு (வித்யாஸ்ரீ) என்கிற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இவ் விருதுகளுக்கு இசைத் துறையில் தனித்தொரு பெருமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஸரிகமபதநிக்கு நல் ஆலோசகராக இருந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கி தவிக்கும் போது தாயாய் தயை புரிந்து தலைமைப் புரவலராய் கை கொடுத்து வரும் கலைக் காவலர் கலைமாமணி, டாக்டர். நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களையும் நன்றியோடு நினைவு கூற கடன்பட்டிருக்கிறோம்.
திரு. நாராயண விஸ்வநாத்
முதன்மை ஆசிரியர் - ஸரிகமபதநி
மதுரை வழக்கறிஞர் நாராயண ஐயரின் மூத்த மகனான பொறியாளர் திரு.நாராயண விஸ்வநாத் அவர்கள் சிறந்த சட்ட வல்லுநரும் கூட. மணிலாவில் இயங்கிவரும் ஆசிய நிர்வாகவியல் அமைப்பின் உயர் பட்டமும், உலகத் தரத்திற்கேற்ற நிர்வாகத் திறன் மற்றும் நிதிநிலை சம்பந்தமான துறைகளில் கூடுதல் பயிற்சியும் பெற்றவர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வதேச விமானதளம் மற்றும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையக் கட்டுமானப் பணிகளிலும் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக வழிகாட்டி இருக்கிறார். சர்வதேச விமான ஆணையத்தின் முதல் அயலக திட்ட இயக்குனராக நியமனமாகி தெற்கு யேமன், செஷியல்ஸ், நாரு தீபகற்பம், அல்ஜீரியா, லிபியா, மாலத் தீவுகள் மற்றும் மொரிஷீயஸ் தீவுகளில் விமான நிலைய கட்டுமான - நிர்வாகப் பணிகளை திறம்பட செய்துள்ளார்.
IDBI, ICICI, IFCI போன்ற அரசு சார்ந்த நிதி நிறுவனங்களின் உதவியோடு தமிழகத்தில் நிறுவப் பெற்ற Technical Consultancy Organisation of Tamil Nadu நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக மிகச் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இவரது பணியினை உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி ஆகியன வெகுவாகப் பாராட்டி உள்ளன.
இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் RITES (Rail India Technical and Economic Services) அமைப்பின் ஆலோசகர் மற்றும் குழு தலைமைப் பொது மேலாளராக வெகு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள நாராயண விஸ்வநாத் தொழில் மற்றும் நிர்வாக மேலாண்மை இவற்றிற்கு சட்ட ஆலோசனை வழங்கிடும் ‘விஸ்வ நாராயணா அஷோஷியேட்ஸ்’ என்கிற நிறுவனத்தின் தலைவராக தற்போது செயலாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக செனட் மெம்பராக இருந்துள்ள இவர் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழக செனட் மற்றும் சிண்டிகேட் மெம்பராக இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார். இது தவிர, ஆன்மிகம் மற்றும் இசை - நாட்டியம் தொடர்பான பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகித்து வருகிறார்.
நீடாமங்கலம் வி.வி.சுப்ரமணியம் மற்றும் பி.வி.ராமன் - பி.வி.லெட்சுமணன் சகோதரர்களில் பி.வி.ராமன், மதுரை மணி ஐயரின் சிஷ்யரான திருவெண்காடு ஜெயராமன், சங்கீதக் கலாநிதி பி.ராஜம் ஐயர் ஆகியோரிடம் பாட்டும், தஞ்சாவூர் லெட்சுமணனிடம் வீணைப் பயிற்சியும் பெற்றுள்ளார். வாலிப காலத்தில் ‘ராக மாலிகா’ என்கிற இசை அமைப்பினை தோற்றுவித்து Chamber Music எனும் இசைக் கச்சேரி முறையை அறிமுகப்படுத்தியவர் நாராயண விஸ்வநாத்.
தமிழ் இசையில் மேடைக் கச்சேரிகள் பல தந்துள்ளார். இவரது பாடல்களின் ஒலி நாடாவினை ஏவி.எம். ஆடியோ வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி ஆகிய நாளிதழ்களில் இசை விமர்சனங்கள் செய்து வருகிறார்.
1997 - நவம்பர் முதற்கொண்டு ஸரிகமபதநி இசை நாட்டிய மாத இதழின் முதன்மை ஆசிரியராக செயலாற்றி வருகிறார். கலை மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக திரு.நாராயண விÞவநாத் அவர்கள் ஆற்றி வரும் தொண்டிற்காக மாநில அளவிலும், இந்திய அளவிலும், உலகளவிலும் விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ளார்.
ரசிகர் - சபா நிர்வாகி - பாடகர் - விமர்சகர் ஆகிய பரிமாணங்களின் அடிப்படையில் ‘இங்கேயும்...! ஸ்ருதிபேதம்’ மற்றும் ‘உன்னுடன்’ ‘இசையுலகம்’ ஆகிய நூல்களை படைத்துள்ளார். இன்றைக்கும் அரசு நூலகங்களில் அவை காணக் கிடைக்கின்றன.
டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
தலைமைப் புரவலர்
நல்லி செட்டியார் என தொழில் - வர்த்தக வட்டாரங்களிலும், பொது வாழ்வு அமைப்புகளிலும் அறிமுகமாகி உள்ள டாக்டர். நல்லி குப்புசாமி செட்டியார் 1940, நவம்பர் 9ம் தேதி பிறந்தார். தனது தாத்தா நல்லி சின்னச்சாமி செட்டியாரால் 1928-ல் சென்னை, தியாகராய நகரில் தொடங்கப்பட்ட ‘நல்லி பட்டு ஜவுளிக் கடையினை’ இன்று சென்னையில் பல இடங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமின்றி வெளிநாடுகள் பலவற்றிலும் விருத்தி செய்துள்ளார் நல்லி செட்டியார். ‘நல்லி’ என்றாலே ‘தரம்’ என்பது உலகறிந்த உண்மை. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நல்லி நிறுவனம் தன் நூற்றாண்டினை காண இருக்கிறது.
நல்லி அவர்கள் நமது பாரம்பரிய இசையின் பரம ரசிகர். சென்னையில் கலைச் சேவை செய்து வரும் பல முக்கிய சபாக்கள் இவரைத்தான் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகத் தலைநகரில் நடைபெறும் பல முக்கிய கலை நிகழ்வுகள் நல்லியின் பொருளாதார உதவியால் அரங்கேறுவது கண் கூடு. இவரே ஒரு எழுத்தாளர்தான் தன் அனுபவ அறிவினை பல்வேறு நூல்களாக கொண்டு வந்துள்ளார். இன்னும் பல எழுத்தாளர்களின் நல்ல நூல்களை சடையப்ப வள்ளலாக இருந்து ஆதரித்து அச்சேற்றி இருக்கிறார்.
கலை - இலக்கியம் மட்டுமின்றி இவருக்கு ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு உண்டு. காஞ்சி பரமாச்சார்யாரின் (பூர்வாசிரம) சகோதரர் ஞானசீலர் சிவன் அவர்களை அவரது கடைசி காலத்தில் தன்னுடைய இல்லத்திலேயே வைத்து பராமரித்து உபசரித்து வந்தார் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.
எல்லாம் இருந்தும் எளிமையில் நாட்டம் கொண்டவர். தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர் என இவருக்குப் பல பரிமாணங்கள் இருந்தாலும் தன்னை இசை ரசிகர் என அடையாளப்படுத்துவதில் அலாதியான பிரியம். தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகள் அறிந்தவர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்பட்டது. தமிழக அரசு ‘கலைமாமணி’ பட்டமளித்து கௌரவப்படுத்தியது. மத்திய அரசு இரு பத்ம விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியது. பல இசை அமைப்புகள் ‘கலை உலகக் காவலர்’, ‘கலா போஷகர்’, ‘கலைப் புரவலர்’ என்ற பட்டங்களால் இவருக்கு தத்தமது நன்றிகளை வெளிப்படுத்தி இருக்கின்றன. டிசம்பர் இசைவிழாவின் போது எந்தெந்த தேதியில், எந்தெந்த சபாக்களில், என்னென்ன நேரத்தில், யார் யார் பாடுகிறார்கள் என்பதனை தொகுத்து ஒரு கையேட்டினை இசை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்குகிறார். அதுமட்டுமின்றி, இசை விழாக்களில் அதிகமாகப் பாடப்படும் கீர்த்தனைகளை தொகுத்து அவற்றின் ராகங்களையும் குறிப்பிட்டு ஒரு கையேடு தயாரித்து உள்ளார்.
நலிந்துவரும் நாதஸ்வரக் கலைக்கு புத்துயிர் ஊட்டும வண்ணம் சென்னையில், ஆண்டு தோறும் ஒரு வார காலம் முக்கியக் கலைஞர்களைக் கொண்டு நாதஸ்வர இசைவிழாவினை தன் சொந்தப் பொறுப்பில் பிரத்யேகமாக நடத்தி வருகிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்மங்குடி, ராஜரத்னம்பிள்ளை ஆகியோர் மீது அன்பு என்பதை விட அளவு கடந்த பக்தி கொண்டவர் நல்லி.
நாரத கான சபாவில் சுவாமி ஹரிதாஸ்கிரி தலைமையிலான விழாவொன்றில் பங்கேற்ற நல்லி அவர்கள் தனது பேச்சில்...
“அடுத்த பிறவி என்று ஒன்று எனக்கு வாய்க்குமேயானால் நான் ஒரு இசைக் கலைஞராகவே பிறக்க வேண்டும். இசையில் நான் உன்னத நிலையை அடைய வேண்டும். இது மேடை சம்பிரதாயத்திற்காக சொல்வது அல்ல; இந்த தருணத்தில், இந்த சூழலில் என்னுள் இருந்து என்னை இயக்கும் ஏதோ ஒரு உணர்வு இயல்பாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை”
- இப்படிப்பட்ட ஒருவர் தலைமைப் புரவலராக இருப்பதில் ஸரிகமபதநிக்கு பெருமை.